search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாத்மா காந்தி"

    • இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக காந்தி மிகப்பெரும் போராட்டம் துவங்க இந்த சம்பவம் துவக்கமாக அமைந்தது.
    • ஜூன் 9ம் தேதி வரை ஐஎன்எஸ் திரிசூல் கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறது

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

    இது நடந்து 130 வருடங்கள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு நடத்தப்படவிருக்கும் நினைவு நிகழ்ச்சிகளில், இந்திய கடற்படை பங்கேற்கிறது. இதற்காக கடற்படையின் போர்கப்பலான ஐ.என்.எஸ். திரிசூல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு சென்றடைந்தது. பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் டர்பன் நகருக்கருகே அமைந்துள்ளது.

    இந்திய சுதந்திரத்தின் முக்கியமான தருணங்களையும் நிகழ்வுகளையும், நினைவு கூறும் விதமாக, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்னும் பெயரில் இந்திய கடற்படை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஐ.என்.எஸ். திரிசூல் போர்கப்பலின் டர்பன் நகர பயணமும் அமைந்துள்ளதாக இந்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

    ஜூன் 6 முதல் 9 வரை இக்கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் 1893ம் வருடம் நிகழ்ந்த அச்சம்பவத்தை நினைவு கூறவும், இந்திய-ஆப்பிரிக்க உறவுகளில் ஒரு புத்தாக்கம் உண்டாக்கவும் இயலும். அப்பொழுது காந்தியின் நினைவுத்தூணுக்கு மலர்களால் அஞ்சலி செலுத்தப்படும். மேலும் அந்த சில நாட்களில், பல தொழில்முறை மற்றும் சமூக நிகழ்ச்சிகளிலும் இக்கப்பல் பங்கேற்கும்.

    1893ம் வருடம் தாதா அப்துல்லா என்பவருக்கு வக்கீலாக ஆஜர் ஆவதற்காக பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி டர்பன் நகருக்கு வந்திறங்கினார். ஜூன் 7, 1893 அன்று பிரிட்டோரியா செல்லும் வழியில் முதலில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் வரும் பொழுது, முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும், ஒரு ஐரோப்பிய பயணியின் தூண்டுதலால், பரிசோதகரால் இறக்கி விடப்பட்டார்.

    நிறவெறி உச்சத்தில் இருந்த அக்காலத்தில், முதல் வகுப்பு பயணம் வெள்ளையரல்லாதவர்களுக்கும், கூலி வேலை செய்பவர்களுக்கும் மறுக்கப்பட்டிருந்தது.

    காந்தி இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக மிகப்பெரும் போராட்டம் துவங்கவும், பின்னாளில் சத்யாகிரக போராட்டம் நடத்தவும் இந்த நிகழ்ச்சியே துவக்கமாக அமைந்தது.

    1997ம் வருடம் ஏப்ரல் 25 அன்று முன்னாள் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலா தலைமையில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான விழாவில், மறைந்த காந்திக்கு "ஃப்ரீடம் ஆஃப் பீட்டர்மாரிட்ஸ்பர்க்" விருது வழங்கப்பட்டது. அப்பொழுது அடக்குமுறைக்கு எதிரான காந்தியின் தியாகத்தையும், ஈடுபாட்டையும் மண்டேலா நினைவு கூர்ந்தார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தொவிக்கப்பட்டுள்ளது.

    • மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
    • கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
    • பாடப்புத்தகங்களை திருத்தி மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கை கடந்த ஆண்டுதான் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படுகிற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தில், 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வரிகள் வருமாறு:-

    * காந்திஜியின் மரணம், நாட்டின் வகுப்புவாத சூழ்நிலையில், மாயாஜால விளைவுகளை ஏற்படுத்தியது.

    * இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான காந்தியின் நாட்டம், வகுப்புவாத இந்துக்களைத் தூண்டிவிட்டது.

    * ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் சில காலம் தடை செய்யப்பட்டன.

    இந்த வரிகள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

    ஏனென்றால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் பாடப்புத்தகங்களில் நீக்கங்கள் செய்யப்பட்டன.

    அந்த வகையில், அப்போது 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட அதிகாரபூர்வ மாற்றத்தில், மேற்கண்ட வரிகள் நீக்கம் இடம் பெறவில்லை.

    கடந்த ஆண்டு திருத்தம் செய்தபோது, குஜராத் கலவரங்கள், முகலாய அரசசபைகள் (தர்பார்கள்), நெருக்கடி நிலை, பனிப்போர், நக்சலைட்டுகள் இயக்கம் உள்ளிட்டவை நீக்கப்பட்டிருந்தன.

    தற்போது மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய வரிகள் உள்ளிட்ட நீக்கப்பட்ட பகுதிகள் பற்றி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குனர் தினேஷ் சக்லானி கருத்து தெரிவிக்கையில், "பாடப்புத்தகங்களை திருத்தி மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கை கடந்த ஆண்டுதான் நடைபெற்றது. இந்த ஆண்டில் புதிதாக எதுவும் நடைபெறவில்லை" என தெரிவித்தார்.

    அதே நேரத்தில், அப்போது அறிவிக்கப்பட்ட நீக்கங்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றிராத வரிகள், தற்போது நீக்கப்பட்டிருப்பது பற்றி அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார்.
    • சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் மனு

    சியோனி:

    மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் விகாஸ் யாத்திரையின் ஒரு பகுதியாக, கடந்த 5ம் தேதி சிஎம் ரைஸ் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஒரு மாணவர், மகாத்மா காந்தியை விமர்சனம் செய்யும் வகையில் கவிதை வாசித்தார். வன்முறையின் போது மகாத்மா அமைதியாக இருந்ததாக அந்த கவிதையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடுவதாக அமைந்தது.

    மாணவர் இவ்வாறு மகாத்மாவுக்கு எதிரான வாசகத்துடன் கவிதை வாசித்தபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்

    இந்நிலையில், அந்த மாணவரை வழிநடத்திய ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பள்ளி முதல்வர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக பொறுப்பு என்றும், அவர்களின் சித்தாந்தம் மகாத்மா காந்தியை அவமதிக்க குழந்தைக்கு கற்றுக்கொடுத்திருப்பதாகவும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் குரானா விமர்சித்தார்.

    தன் மீதான விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ முன்மம், இந்த சம்பவம் பள்ளி குழந்தைகள் தொடர்புடையது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார். குழந்தைகளை அரசியலுக்கு இழுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

    • இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.
    • காந்தி, நேரு வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,

    தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

    நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்திற்கு அவர் எதிரானவர். 


    வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது

    இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்.

    ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார்.

    சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.
    • கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு.

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்படி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து, இன்று மாலை கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு வழங்குகிறார்.

    • அனைத்து சமுதாய மக்கள் ஒத்துழைப்புடன், அவர்கள் அளித்த நன்கொடையின் உதவியினால் 6 மாதங்களில் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இ
    • காந்தி கோவிலில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு தேசத்தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளது.

    கம்பம்:

    நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற தலைவர்கள் போராடி தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். அவர்களின் தேசப்பற்று புத்தகங்களில் வரலாறாக மட்டுமே நிலைத்து நிற்கிறது. ஆனால் இந்த மண்ணில் பிறந்து மகாத்மாவாக மறைந்த காந்தியடிகளுக்கு தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகிகள் கட்டிய கோவில் இன்று வரை மக்களால் போற்றி வணங்கப்படுகிறது.

    இதே கிராமத்தை சேர்ந்த பரமசிவம், முன்னாள் எம்.பி. சக்திவடிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியராஜ், கிருஷ்ணசாமி, சாமாண்டி, குந்திலிராமசாமி, வீரச்சாமி, சுப்பிரமணியன், சுருளியாண்டி, பழனிவேல் உள்பட 80-க்கும் மேற்பட்ட தியாகிகள் சுதந்திர போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர். இவர்கள் அனைவரும் சுதந்திரத்திற்கு பின் மகாத்மா காந்திக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், சுதந்திர போராட்டத்தை என்றென்றும் நினைவுகூரும் வகையிலும் கடந்த 1985-ம் ஆண்டு கோவில் கட்டினர்.

    அனைத்து சமுதாய மக்கள் ஒத்துழைப்புடன், அவர்கள் அளித்த நன்கொடையின் உதவியினால் 6 மாதங்களில் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு மகாத்மா காந்திக்கு வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை அப்போதைய துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.

    காந்தி கோவிலில் ஒரு சன்னதியில் காந்தியடிகளும், மற்றொரு சன்னதியில் கஸ்தூரிபாயும் தனித்தனியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் தினமும் 3 கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனி அர்ச்சகரும் நியமிக்கப்பட்டுள்ளார். காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    இந்த கோவிலில் சிவபெருமான் மகாகணபதி, துர்க்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இருந்தபோதும் காந்திக்கும், கஸ்தூரிபாய்க்கும்தான் முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவிக்கையில்,

    கடந்த 1928-ம் ஆண்டு முதலே இந்த மண்ணில் சுதந்திர போராட்ட இயக்கம் தீவிரமாக வளர தொடங்கியது. இந்த மண்ணை சேர்ந்த சக்திவடிவேல், பாண்டியராஜ் உள்பட ஏராளமானோர் தங்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டனர்.

    கள்ளுக்கடை மறியல், உப்பு சத்தியாகிரக போராட்டங்களில் பங்கெடுக்க ஆங்கிலேயரின் கண்களில் படாமல் தினமும் 40 கி.மீ. தூரம் நடந்து சென்று வருவார்கள். குறிப்பாக சக்திவடிவேல் இந்த போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்நாளில் அவர் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    காந்திஜியின் உடல் 1948-ம் ஆண்டு தகனம் செய்யப்பட்ட பிறகு அவரது அஸ்தி பல பாகங்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவில் பல நகரங்களுக்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சக்திவடிவேல் முயற்சியால் இங்கும், அஸ்தி கொண்டுவரப்பட்டது. அப்போது ஏராளமான மக்கள் அந்த அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அஸ்தி சுருளிஅருவியில் கரைக்கப்பட்டது.

    அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடமே தற்போது காந்தியடிகள் கோவிலாக உள்ளது. அவர்கள் தெரிவிக்கையில், இந்த கோவில் காலம் காலமாக காந்தியடிகள் பெயரையும், இந்திய சுதந்திரத்தின் பெயரையும் நினைவுகூரும் வகையில் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி நாங்கள் இந்த கோவிலை தொடர்ந்து பராமரித்து வருகிறோம். எங்களுக்கு பிறகு வரும் சந்ததியினரும் இதனை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.

    காந்தி கோவிலில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு தேசத்தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளது. இங்கு வரும் குழந்தைகளுக்கு அவர்களைப்பற்றி எடுத்துக்கூறி சுதந்திரத்தின் அருமையை அவர்களுக்கு விளக்கி வருகிறோம் என்றார்.

    நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் காந்தியடிகள் கோவிலும் மூவர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

    ×